Advertisement

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம், நூல் தொடர் - பகுதி 4

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Sivagnabotham - part 4". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

சிவபெருமான் ஏன் உலகத்தைப் படைத்து ஒடுக்க வேண்டும் ?

உயிர்கள் யாவும் அறிவற்ற நிலையில் ஆணவ மலமானது முழுவதுமாக மறைக்கப்பெற்ற நிலையில் உள்ளது. ஆணவம் என்பது திமிர், இருமாப்பு என்ற பொதுவான அர்த்தம் உள்ளது அன்று. சைவ சித்தாந்தம் கூறும் ஆணவம் ஒரு கண்ணுக்குத் தெரியாத அருவப் பொருள். இது உயிர்களின் அறிவை மறைக்கும் ஆற்றல் பெற்றது. இது பேரிருள் எனப்படும். மிகவும் வலிமையானது. இந்த ஆணவ மலம் நீங்கினால் தான் அறிவு பெற்று தங்கள் நிலையை உணர்ந்து இறைவனை அடைந்து அவன் திருவடி நிழலில் தஞ்சமடைந்து எப்போதும் பேரின்பத்தை நுகர முடியும். ஒரே நேரத்தில் இந்த ஆணவ மலத்தை நீக்குவது இயலாது. படிப்படியாகத் தான் இதை நீக்க முடியும். 

இந்த உயிரின் ஆணவ மலத்தை நீக்குதற் பொருட்டே இறைவன் இந்த புவனத்தையும் உலகையும் மாயை என்னும் பொருளிலிருந்து தோற்றுவித்தான். இந்த மாயை உயிர்களுக்கு சிற்றறிவைத் தரவல்லது. இந்த அறிவை வைத்து உயிர்கள் தான் யார் என்பதை உணரும் வல்லமை பெறுகிறது. இறைவனை ஒருவன் இருப்பதையும், அவன் நமக்கு செய்யும் கருணையையும் உணர வல்லதாகிறது. அப்படி உணர்ந்த உயிர், இறைவனை நாடித் துதித்து, பக்குவமடைந்து இறைவனின் அருளைப் பெற்று முக்தியடைகிறது. முக்தியடைந்த பின் இறைவனோடு ஒன்றியிருந்து எப்போதும் பேரின்பத்தை அனுபவித்து வருகிறது.

இவ்வாறான உயிர்கள் அறிவு பக்குவம் அடையும் பொருட்டே இறைவன் தன் கருணையினால் இந்த உலகைப் படைத்துள்ளான். ஆனால், உயிர்களோ, சிறிது அறிவு பெற்றவுடன், இறைவனை நினையாமல், இவ்வுலகில் இருக்கும் சிற்றின்பங்களை நாடிச் சென்று நல்வினை தீவினைக்குள் அகப்பட்டு பிறவிச் சுழலில் உழல்கிறது. உழன்று உழன்று தான் விரும்பியதை அடைந்து அதன் பின்னர் அதை வெறுத்து பக்குவமடைந்த பின்னரே இறைவனை நாடுகிறது. அது வரை இந்த பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருக்கிறது. எப்போது இந்த உலகைப் பிடிக்காமல் இறைவனை உணர்ந்து அவன் திருவடியை அடைய நினைக்கிறதோ, அப்போது தான் அது முக்தி அடைய தகுதி பெறுகிறது. அதன் பின்னர் இறைவன் திருவருள் கூடும் போது, அதற்கு முக்தி கிடைக்கிறது. 

இதற்கு எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் ஆகலாம். இது காறும் வந்த சிந்தனைகள் அனைத்தும், அதற்கு மேலும் உள்ள உண்மைகள் அடங்குமாறு மூன்றே வரிகளில் முதல் சூத்திரத்தை வடிவமைத்துள்ளார் நம் குருநாதர் மெய்கண்டார். அடுத்த சிந்தனையில் அந்த சூத்திரத்தைக் காண்போம்.

முதல் நூற்பா

முதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் கொண்டு காணப்படாத கடவுளின் இருப்பை உணர்த்துகிறார் ஆசிரியர்.

நூற்பாவின் முற்பகுதி, இவ்வுலகைத் தோற்றுவித்து நடத்தும் முதற் கடவுள் உண்டு என்பதைப் பொது வகையால் நிறுவும். பிற்பகுதி, அம்முதற் கடவுள் முற்றழிப்பைச் செய்பவனாய் உள்ள சிவபெருமானேயன்றிப் பிறர் அல்லர் எனச் சிறப்பு வகையால் நிலை நாட்டும். இனி, நூற்பாவை நோக்குவோம்.

நூற்பா:

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்.

இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.

நூற்பாவின் பொருள்:

இவ்வுலகம் ஒரு தொகுதிப் பொருள். ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பவற்றின் கூட்டமே உலகம். எனவே, அது பல பகுதிகள் கூடி அமைந்தது என்பது விளங்கும். மேலும், நம் அறிவினால்
சுட்டி அறியப்படுவதாகவும் உள்ளது. இவ்வாறு பகதிகளை உடையதாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலால், இவ்வுலகம் தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய முத் தொழில்களை உடையது என்பது விளங்கும்.

அறிவற்றதாகிய உலகம் தானே தோன்றி நின்று அழியும் என்றல் பொருந்தாது. அதனை தோற்றுவித்து நடத்துவதற்கு ஒரு பேரறிவாளன் இருத்தல் வேண்டும்.
இவ்வுலகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒடுங்கியிருந்தது. முன்பு அதனை அவ்வாறு ஒடுங்குமாறு செய்தவனே மீள அதனைத் தோற்றுவிப்பவனும் ஆவான்.

எனவே ஒடுக்கத்தைச் செய்பவனாகிய அழித்தற் கடவுளே உலகிற் முதற் கடவுள் ஆவான் என்றும், ஏனையோர் முதல்வர் அல்லர் என்றும் ஆராய்ச்சியில் வல்லோர் கூறுவர். 

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement