Advertisement

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா - சுந்தரனார் அருளிய பதிகப்பாடல்கள்

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books about "Saiva Nalvargal - sundarar hyms". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

பதிகம் உருவான வரலாறு:

ஏழாம் திருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துவந்த ஆலாலசுந்தரர் திருத்தொண்டத் தொகை வெளிப் படுதற்கேதுவாக, பூக்கொய்யவந்த சேடியர் இருவர்பால் சிறிது மனத்தைச் செலுத்த, பெருமான் கட்டளைப்படி திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடை யனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத்தோன்றி நம்பி யாரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். மணப்பருவம் அடைந்த அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மணப்பந்தரில் சிவ பெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி கிழ வேதியராக வந்து ஓலைகாட்டி, ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு ஆட்கொண்டு `நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்று கட்டளையிட்டருளினார். அதுபோழ்து வன்றொண்டர் முன்பு இறைவனைப் `பித்தன்` என்று பேசிய சொல்லையே முதலாகக்கொண்டு பாடும்படி அருளிய இறைவன் அருளாணையின் வண்ணம், பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 தடுத்தாட்கொண்ட புராணம். 70 - 74) 

பாடலின் சொல்லும் பொருளும்:

இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, `அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது தகுமோ` என இரங்கி அருளிச்செய்தது.

பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா

எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்

அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.

விளக்கம்: பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்

பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்

பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி

மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ

கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ

செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.


விளக்கம்: இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா

யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா

தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ

எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்

மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய்

வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்

தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய்

தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர்

ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா

தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே

செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

விளக்கம்: மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால்

பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்

சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.

விளக்கம்: மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement