Advertisement

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம், நூல் தொடர் - பகுதி 1

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Sivagnabotham - part1". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

பிறை சூடி

சிவஞானபோதம் நூல், எங்கிருந்து நமக்கு வந்தது?

சைவ சமயம் அரிய பெரும் அளவிலா ஞானமுடைத்து என்பதை நாம் அறிவோம். காலச் சுழலில், இன்றைய நாளில் ஓர் எறும்பாய் உயிர்பெற்று அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அரிய பெரும் பரிசாக சிவஞானம் பற்றிய உண்மைகள் கிடைத்துள்ளது. இவற்றை நமக்கு அருளியது யார்?. எப்படி நமக்கு கிட்டியது?.

பிறப்பு இறப்பும் முதலும் முடிவும் இல்லாத பரமசிவனார் உயிர்கள் மீது பெரும் கருணை கொண்டு சிவஞானத்தை போதித்தார். சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவரது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தார்களாம். சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

திருநந்திதேவர் சிவாகமங்களின் உண்மையை சனற்குமார முனிவருக்கு உபதேசித்தார். அவர் அவற்றை சத்தியஞானதரிசினிகளுக்கும், அவர் தம் மாணவர் பரஞ்சோதி முனிவருக்கும் உபதேசித்தனர். திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் தேவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அகச்சந்தானக்குரவர் எனப்படுவர்.

பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண வரும் போது 2 வயது குழந்தையாகிய மெய்கண்டாருக்கு திருவருளின் படி உபதேசித்தார். மெய்கண்டாரின் சீடரானவர் சகலஆகம பண்டிதரான அருணந்திசிவம். அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். அவரின் சீடர் உமாபதிசிவம். இவர்கள் நால்வரும் பூதபரம்பரையை சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் புறச்சந்தானக்குரவர் எனப்படுவர். உமாபதிசிவத்தின் சீடர் அருள்நமச்சிவாயர். அவரது சீடர் சித்தர் சிவப்பிரகாசர். அவரது சீடர் நமச்சிவாய மூர்த்திகள். இவரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவி, இன்றும் குருபரம்பரையாக சைவ சமயத்தை உய்வித்து வருகின்றனர். மறைஞான சம்பந்தரின் சீடரான மச்சுச்செட்டியார் என்பவரின் 8 ஆவது வழி சீடரான குருஞானசம்பந்தர் என்பவர் தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். இவர்களும் சைவ சமயத்திற்கு தலைமுறை தலைமுறையாக அரும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர்.

அகச்சந்தான குரவர்களும் அவர்களின் சீடர்களும் நமக்கு அருளிச் செய்ததே 14 சாத்திர நூல்களாகும். கிடைத்தற்கரிய ஞான புதையல்களை நாம் அறிந்து படித்து பயன்பெறுவோம்.

சிவஞானபோதம் நூலின் நோக்கம்

வரும் சில மாதங்களில் உலகிலேயே தத்துவ துறையில் தலைசிறந்த அறிவு நூலாகிய, சைவ சித்தாந்தத்தின் கருத்துக்களை முழுமையாக நமக்கு உணர்த்தக்கூடிய சிவஞான போதம் என்னும் நூலில் இருந்து பல கருத்துக்களை சிந்திக்க இருக்கிறோம். சைவ சமயத்தில் 14 சாத்திர நூல்களுள்ளும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தலையாய நூலாகும். இந்நூலை தொட்டு அறிவதற்கே மிகப் பெரும் புண்ணியம் செய்திருந்து சிவனருள் பெற்றிருக்க வேண்டும் என்பர் சான்றோர். அவ்வாறாயின் இந்நூலின் பெருமையை நம்மால் ஒருவாறு யூகிக்க இயலும். இந்நூல் அளவில் மிகவும் சிறியது. சொல் சுருக்கமும், பொருள் பெருக்கமும் உடையது.

இந்த நூலைச் செய்தவர் மெய்கண்டார். ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.

உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.

சிவஞான போதம் சிந்தனைகள் தொடரும். திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement