சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 1

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 1". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 1) பற்றி சைவ சித்தாந்த வகுப்பு ஆசிரியர் 51 கேள்விகள் கொடுத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த அதன் விடைகளை இங்கு தொகுத்துள்ளேன். நான் இதற்கு விடை அளித்தாலும், நீங்கள் உண்மை விளக்கம் புத்தகத்தை படித்து, தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வேறு கருத்துக்கள் இருந்தாலும் கூறுங்கள். இப்பகுதி - 1ல், முதல் 1 -10 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...

1. உண்மை விளக்கம் என்பதில் உண்மை என்பதன் பொருள் என்ன?

சைவ சமயம் என்றும் அழியாப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். இறை, உயிர், தளை என்பதே அந்த மூன்று பொருள்கள். இவற்றை பதி, பசு, பாசம் எனவும் கூறுவர். இந்த மூன்றுமே அநாதியானது. உண்மை என்பது வடமொழியில் தத்துவம் எனப்படும். எப்பொருளையும் இரு வகையாக அறியலாம். ஒன்று அதன் பொதுத் தன்மையை உணர்வது. மற்றொன்று, அதன் உண்மை தன்மையை உணர்வது. முப்பொருளின் உண்மையை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆகவே, உண்மை என்பது முப்பொருளின் உண்மை தன்மையை குறிக்கிறது.

2. இந்நூலின் ஆசிரியர் யார்? அவருடைய ஆசிரியர் யார்?

உண்மை விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் மணவாசகங்கடந்தார் என்பவர். அவருடைய ஆசிரியர், சந்தான குரவர்களில் முதற்குரவராகிய மெய்கண்டார் அல்லது மெய்கண்ட தேவ நாயனார். இவர் வரலாறு தெரியவில்லை. அவரது ஊர் திருவதிகை என்பது மட்டும் குறிப்பு உள்ளது.

3. இந்த நூலின் தனிச் சிறப்பு என்ன?

முப்பொருளின் இயல்புகளை ஏனைய சாத்திர நூல்களும் விளக்குகின்றன. இருப்பினும் உண்மை விளக்கம் நூலின் தனிச்சிறப்பாவது, அம்பலவாணர் ஆடும் அருட்கூத்தின் உண்மையை விரிவாக விளக்கிக் காட்டுகிறது. இது ஏனைய நூல்களில் விளக்கப்படாதது. இதுவே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

4. இந்த நூல் எதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது?

"வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா உண்மைவிளக்கம் உரை செய்ய" என்பதன் மூலம், சிவாகமங்கள் கூறும் உண்மைகளை வழுவாமல் அப்படியே உரைக்கப் புகும் நூல் உண்மை விளக்கமாகும். உபநிடதங்களின் தெளிபொருளை விளக்குவது சிவ ஆகமங்கள். அந்த சிவாகமங்களில் உணர்த்தப்படும் முப்பொருள் உண்மையை வழுவாமல் அப்படியே உணர்த்த முற்படுவது இந்த நூல்.

5. விநாயகரை "அந்தி நிறத்தன்" என்று கூறுவதன் பொருள் என்ன?

செவ்வானம் போன்ற சிவந்த ஒளியை உடையவர் விநாயகர் என்பது பொருள்.

6. தம் ஞானாசிரியரின் தன்மைகளாக இந்நூலாசிரியர் கூறுவது யாது?

இந்த உலகம், உடம்பு, முப்பத்தாறு தத்துவமுமே மெய் என்று எண்ணுவது உயிரின் இயல்பு. ஆனால், அவை உண்மையன்று. அவை பொய். அந்த பொய்யை பொய் என்று நமக்கு உணர்த்த வல்லவர் தமது ஞானாசிரியன். நிலையில்லாத அந்த பொய்யான தோற்றங்களைக் கடந்த இறைவனே மெய். பொய்யை அகற்றினால் மெய் வெளிப்படும். அந்த மெய் மிகுந்த ஆனந்தப் பொருளாம். அந்த பொய்யை அகற்றி மெய்யை உணர்த்த வல்லவர் தமது ஞானாசிரியன். இவையே தமது ஞானாசிரியரின் தன்மைகளாக நூலாசிரியர் கூறுகிறார்.

7. சுத்தவினா என்பதன் பொருள் என்ன?

முழுவதுமாக அறியாமை இருளில் அழுந்தியிருக்கும் போது உயிர்கள் கேவல நிலையில் உள்ளன. அவ்வாறு உள்ள உயிர்கள் இறைவன் கருணையினால் மாயையின் உதவியோடு மயக்கம் சிறிது நீங்கி, இயக்கம் பெற்று சகல நிலையை அடைகிறது. இந்த நிலையில் உலகியல் இன்ப துன்பங்கள் அனுபவிக்கிறது. இவ்வாறு சகல நிலையில் உள்ள உயிர்கள் இறைவன் திருவருளை அறிந்துணர்ந்து மலங்கள் யாவும் நீங்கப் பெற்று இறைவன் திருவருளோடு கூடியிருக்கும் நிலை சுத்த நிலை. அவ்வாறான சுத்தநிலையை எய்தும் விருப்பத்தால் ஆசிரியரிடம் வினாக்களை எழுப்பி பதில் பெற்று அந்நிலையை எய்த விளைவதனால், அவை சுத்தவினா எனப்பட்டது.

8. ஆறாறு தத்துவங்கள் எதனுடைய காரியப்பாடு?

மாயை. கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் மாயை. அது இறைவனின் வைப்பு சக்தியாகும். இந்த மாயையிலிருந்து தோன்றியவை தான் முப்பத்தாறு தத்துவங்களும். ஆகவே, முப்பத்தாறு தத்துவங்கள் மாயையின் காரியப்பாடு ஆகும்.

9. தம் ஞானாசிரியரிடம் கேள்விகள் கேட்கும் போது ஆன்மாவைப் பற்றி என்ன குறிப்பிடுகிறார்? அதன் பொருள் என்ன?

ஆசிரியர் "தன்னை" ஆன்மா என்று உணர்ந்து அந்த ஆன்மாவின் தன்மையை விளக்க கேட்கும் போது, "நான் ஏது" என்கிறார். நான் என்பது ஆன்மாவைக் குறிக்கிறது. இவ்வாறு ஆன்மாவின் தன்மையை விளக்குமாறு கேட்கிறார். இந்த ஆன்மாவானது ஆணவம் கன்மம் ஆகிய பாசத்தோடு வேறாகாமல் பிணைந்து இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

10. தான் ஏது என்பதன் பொருள் என்ன?

தான் என்பது முக்தியைக் குறிக்கிறது. முக்தியின் இயல்புகளை விளக்குமாறு ஆசிரியர் தன் ஞானாசிரியரிடம் வினவுகிறார்.

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url