மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு - ஞானசம்பந்தர் அருளிய பதிகப்பாடல்கள்.
Hi to all viewers,
We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books about "Saiva Nalvargal hyms". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..
பதிகம் உருவான வரலாறு:
மதுரையில் , அருகர்கூடி , தம்திருமடத்தில் இட்டதீயை , புகலிவேந்தர் , இனி அரசன் எய்தும் வெப்பு அகலற் பொருட்டு , தீண்டி , வெண்ணீறு இடுதற்குரிய பேறு உடையன் ஆதலின் , பேரருளினால் ` பையவே செல்க ` என்று ஏவிய வெப்பு நோய் தென்னனை மேவிற்று . முயன்ற பலராலும் தீர்க்க முடியா திருந்தது . ` திருஞானசம்பந்தப் பிள்ளையார் கடைக் கண் ணோக்கம் பெற்றால் பிறவி நோயே ஒழியும் எனின் , இந்நோய் ஒழிவதில் ஐயமில்லை ` என்று குலச்சிறையார் கூறினார் . ஞான சம்பந்தர் என்ற திருப்பெயரைக் கேட்டதே பாண்டியனுக்கு ஓரளவு இன் பம் உண்டாக்கிற்று . அதனால் , அழைத்துவர அவன் வேண்டினான் . சென்று வணங்கி வேண்டி அழைத்தனர் அமைச்சர் முதலோர் . திருவுளம்பற்றிப் பிள்ளையார் எழுந்தருளி னார் . நோக்கும் புண்ணியனானான் காக்கும் பாண்டியன் . அவன் வெப்பு நோயை விலக்கப் பாடியருளியது இத் திருநீற்றுப் பதிகம் .
பாடலின் சொல்லும் பொருளும்:
போதம் – ஞானம், அறிவு. புனல் – ஆறு, நீர். புன்மை – சிறுமை, இழிவு. தக்கோர் – தகுதி வாய்ந்தவர், அறிஞர். கவின் – அழகு. சேணம் – பொறுப்பான இடம். புகலி – சொல், கூறு. பூசுரன் – பிராமணன். குண்டிகை – கமண்டலம், குடுக்கை. சாக்கியர் – சூரிய குல சத்திரயர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: திருஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது.
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்பநிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மனவருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.
விளக்கம்: கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.
விளக்கம்: பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.
விளக்கம்: நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது.
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.
விளக்கம்: மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது. தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
விளக்கம்: ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார்.
திருச்சிற்றம்பலம்...
