சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 2
Hi to all viewers,
We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 2". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..
உண்மை விளக்கம் (பகுதி - 2) இப்பகுதியில், அடுத்த 11 - 20 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...
11. இந்திரியங்கள், உறுப்புகள் இரண்டும் ஒன்றா? வெவ்வேறா?
இந்திரியங்கள் வேறு. உறுப்புகள் வேறு. உடலில் புறத்தே இருப்பவை உறுப்புகள் எனப்படும். உதாரணம், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு. செவி கேட்கும் தொழிலைச் செய்யும். கண் பார்க்கும் தொழிலைச் செய்யும். இந்திரியங்கள் என்பது இந்த உறுப்புகளில் நின்று அப்புலன்களின் அறிவனவாகிய ஆற்றல்களேயாகும். செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவியிந்திரியம் ஆகும். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண்ணிந்திரியம் ஆகும். இந்திரியங்களே அந்த உறுப்பின் ஆற்றலை உயிருக்கு அறிவிக்கச் செய்யும். ஒரு சிறு உதாரணத்தின் மூலம் இந்த இரண்டையும் எளிதாக உணரலாம்: உயிர் இல்லாத பிணத்தில் உறுப்புகள் இருக்கும், ஆனால், இந்திரியங்கள் இருக்காது. பிணத்தில் கண் இருக்கும். ஆனால் ஒளியை உயிருக்கு அறிவிக்கும் கண்ணிந்திரியம் இருக்காது.
12. பஞ்ச (தூல) பூதங்களின் குணம், தொழில் யாவை?
- ஆகாயம் - ஓசை
- காற்று - ஊறு, ஓசை
- நெருப்பு - ஒளி, ஊறு, ஓசை
- நீர் - சுவை, ஒளி, ஊறு, ஓசை
- நிலம் - நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை
பூதங்கள் குணம் தொழில்
- மண் திண்மை பொருளைத் தாங்குதல்
- நீர் குளிர்ச்சி பொருளை மென்மைப்படுத்துதல்
- தீ வெம்மை பொருளை நீறாக்கி ஒன்றுபடுத்துதல்
- காற்று அசைவு பொருளைத் திரட்டுதல்
- வான் வெளியாதல் பொருளில் ஊடுருவி நிறைந்து நிற்றல்
13. தன்மாத்திரை என்றால் என்ன? அவற்றின் பெயர்களைக் கூறுக.
பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்காக முதலில் சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் தோன்றுகின்றன. இதில் அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும்: சாத்துவிக குணக்கூறு, இராசத குணகூறு மற்றும் தாமத குணக்கூறு. இதில் பூதாதி அகங்காகரம் எனப் பெயர் பெறும் தாமத குணக்கூறிலிருந்து தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. இந்த ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து பின்னர் ஐந்து பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் பூதங்கள் பருமையானவை.
தன்மாத்திரை என்ற சொல்லுக்கு *அதனளவில் நிற்பது* என்று பொருள். உதாரணமாக, சுவையை சுவை என்று நேரடியாக அறிய முடியாது. மாறாக, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்று ஏதாவது ஒரு வடிவில் தான் அறிய முடியும். அதே போல, ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது, வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு போன்ற சிறப்பு தன்மையினாலே உணரப் பெறும். இவ்வாறு நிற்கும் பொது நிலையிலேயே அவை தன்மாத்திரைகள் எனப்படுகின்றன.
14. ஐம்புலன்கள் என்றால் என்ன? அவற்றின் பெயர்களைக் கூறுக.
பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்காக முதலில் சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் தோன்றுகின்றன. இதில் அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும்: சாத்துவிக குணக்கூறு, இராசத குணகூறு மற்றும் தாமத குணக்கூறு. இதில், தைசத அகங்காரமாகிய சாத்துவிக குணக்கூறிலிருந்து மனம் தோன்றும். அதன் பின்னர் புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும். செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன ஞானேந்திரியங்களாகும். இவை, ஐம்புலன்கள் அல்லது, ஐம்பொறிகள் அல்லது அறிகருவிகள் என்றும் பெயர் பெறும்.
15. ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் யாவை?
ஞானேந்திரியங்கள் தோற்றம் பற்றி மேலே பார்த்தோம். செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியன ஞானேந்திரியங்கள். இவை உயிர்க்கு அறிகின்ற ஆற்றலைக் கொடுப்பதனால் ஞானேந்திரியங்கள் என்ற பெயர் பெற்றன. வைகாரிக அகங்காரமாகிய இராசத குணகூறிலிருந்து தோன்றுவது கன்மேந்திரியங்கள். அவை, வாய், கால், கை, கருவாய், எருவாய் என்பன. இவற்றை தொழிற் கருவிகள், செயற்கருவிகள் எனவும் கூறுவர். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன.
16. இந்திரியங்கள் புலன்களை நுகர்வதால் நமக்கு என்ன பயன்?
பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்க்காக முதலில் அகக் கருவிகள் தோன்றும். அவை சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக்கரணங்கள். அகங்காரத்தின் சாத்துவிக குண கூறிலிருந்து மனம் தோன்றும். பின்னர் ஞானேந்திரியங்கள் தோன்றும். மனம் அகக்கருவி. ஞானேந்திரியங்கள் புறக்கருவி. மனமாகிய அகக்கருவி, இந்திரியங்களாகிய புறக்கருவிகளை பற்றி நிற்கிறது. இந்திரியங்கள் புலன்களை நுகர்ந்து அதன் மூலம் பெறும் அறிவாற்றலை மனம் பெறுகிறது. மனம் அதை அகக்கருவியாகிய நம் புத்திக்கு தருகிறது. இதனால் நம் ஆன்மாவாகிய உயிர் புலன்களின் மூலம் பெறும் அறிவைப் பெற்று இயக்கம் பெறுகிறது.
17. அந்தக்கரணங்கள் மூன்றா அல்லது நான்கா?
அந்தக்கரணங்கள் நான்கு. அவை, சித்தம், புத்தி, அகங்காரம், மனம் ஆகியவையாகும். இவை நான்குமே அகக் கருவிகள் எனப்படும்.
18. அந்தக்கரணங்களின் துணையால் ஆன்மா பெறுவது என்ன?
புறத்தே உள்ள புலனை (உதாரணம் கண்) அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, அதனைப் பற்றி நிற்கும் மனம் அதை புத்திக்கு தர, புத்தி இஃது இன்னது என்று அகங்காரம் இச்செயல்களுக்கு அடிநிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என்று முந்தியெழும் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீள சிந்திக்கும் ஆற்றலை ஆன்மா பெறுகிறது. சுருங்கக் கூறின், ஆன்மா இந்த நான்கு கருவிகளையும் பற்றி நின்று, சிந்திக்கும் ஆற்றல் பெற்று உலகப் பொருட்களை சிறப்பாக உணந்து அவற்றில் அழுந்துகிறது.
19. மூலப் பிரகிருதி / குணதத்துவம் - இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு?
பிரகிருதி மாயை மூன்று குண வடிவாய் உள்ளது. சாத்துவிகம், இராசசம், தாமதம் என்பன அந்த மூன்று குணங்கள். பிரகிருதி மாயை இந்த மூன்று குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். நாற்றத்தினை உள்ளடக்கி நிற்கும் அரும்பு போல இது நிற்கும். இந்த மூன்று குணங்களும் வெளிப்படாமல் சூக்குமமாய் உள்ளடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை ஆகும். பின்னர் அம் மூன்று குணங்களும் வெளிப்பட்டுத் தம்முள் சமமான நிலையினதாக நிற்கும். இந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். மூன்று குணங்கள் வெளிப்பட்டு நிற்கும் நிலையை வியத்தம் என்றும், வெளிப்படாமல் நிற்கும் நிலையை அவ்வியத்தம் என்றும் கூறுவர். குண தத்துவத்திற்கு வியத்தம் என்றும் பிரகிருதிக்கும் அவ்வியத்தம் என்ற பெயரும் தெளிவு. இந்த குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும்.
20. பஞ்ச கஞ்சுகம் என்பவை எவை? அவற்றின் தொழில் என்ன?
கஞ்சுகம் என்றால் சட்டை. உயிர்கள் முதலில் ஆணவ மலத்தில் முழுவதுமாக அழுந்தி இருக்கும். உயிர்கள் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டாலன்றி, உலக போகத்தை அறிந்து, அவற்றை நுகர இச்சித்து அதை அடைய முயற்சி செய்யாது. ஆகவே, உயிர்களை ஆணவ மலத்திலிருந்து விடுவிக்க சில கருவிகள் தேவைப்படுகிறது. அவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுகின்றன. மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் மற்றும் புருடன் என்பன. மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் தாம் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பன. இவற்றில் அராகம் ஆன்மாவிற்கு இச்சா சக்தியையும், வித்தை ஞான சக்தியையும், கலை கிரியா சக்தியையும் கொடுத்து ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என்று வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனை காலம் நுகர்க என்று எல்லைப்படுத்தும். இந்த ஐந்து கருவிகளும் ஆன்மாவிற்கு இன்றியமையாதனவாய் ஆன்மாவோடு நீங்காமல் சட்டை போல ஒட்டியே இருக்கும். இதுவே பஞ்சகஞ்சுகம் என்று பெயர் பெறும்.
திருச்சிற்றம்பலம்...
