Advertisement

சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 4

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 4". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 4), இப்பகுதியில், அடுத்த 29 - 30 கேள்வி பதில்கள் உங்கள் பார்வைக்கு...

29. இறைவன் உயிர்களுக்கு வேறாய், உயிர்களுடன் ஒன்றாய், அவற்றோடு உடனாய் நிற்றற்க்கு கூறப்படும் உவமைகள் யாவை?

1. இறைவன் வேறாய் நிற்றல்

கண்ணொளி தனியாக தானே நின்று பொருட்களைக் காண முடியாது. அவ்வாறு காண வல்லதாயின், இருளிலும் பொருட்களை காண முடிய வேண்டும். ஆகவே, வேறொரு ஒளியின் துணையைப் பெற்றே கண்ணொளி பொருட்களைக் காணும் திறனைப் பெறுகிறது. பகலில் சூரியனின் ஒளியைத் துணையாகக் கொண்டு கண்ணொளி பொருட்களைப் பார்க்கிறது. கண்ணொளி வேறு. சூரிய ஒளி வேறு. இரண்டும் கலந்தால் தான் கண்ணுக்கு பொருட்களைப் பார்க்கும் தன்மை கிடைக்கிறது. இது போலவே இறைவன் உயிர்களுக்கு வேறாய் நிற்கிறான்.

2. இறைவன் ஒன்றாய் நிற்றல்

ஐம்பொறிகள் தாமாக அறியா. இது எப்படித் தெரிகிறது? உயிர் நீங்கிய உடம்பில் கண், காது முதலிய பொறிகள் கெடாமல் நல்ல நிலையில் இருந்தாலும் அவை அறிதலாகிய தொழிலைச் செய்வதில்லை. அவை தாமே அறியா என்பதும், உயிர் தம்மோடு பொருந்தி நின்றபோதே அவை அறியும் என்பதும் இதனால் விளங்கும். அந்த ஐம்பொறிகளின் நிலையில்தான் உயிரும் உள்ளது. உயிரும் தானாக அறிவதில்லை. உயிருக்கு உயிராக இறைவன் பொருந்தி நின்று அறிவிக்கும்போதே உயிர் யாதொன்றையும் அறியும் வன்மையைப் பெறுகிறது. எவ்வாறு ஐம்பொறிகள் உயிரால் அறிகின்றனவோ, அவ்வாறே உயிரும் இறைவனால் அறிகின்றது. இவ்வகையில் ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாகின்றன.

3. இறைவன் உடனாய் நிற்றல்

ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத்திறந்த அளவிலேயே உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு சில முயற்சிகளும் செய்யப் பிறப்பவையாகும். வாயைத் திறத்தல் ஆகிய அம்முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம்முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர வொலியோடு கூடியே பிற முயற்சிகளில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும், அகரவொலியின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும் எனவே எழுத்துக்களுக்கெல்லாம் அடி நிலையாய் இருப்பது அகர வுயிரேயாகும். அதுபோல இறைவனே எப்பொருளின் இயக்கத்திற்கும் முதலாய் நிற்கின்றான்.

30. இறைவன் நடம் செய்வதற்குரிய இடம், உருவம் குறித்து இந்நூல் கூறுவது என்ன ?

1. திருக்கூத்து நிகழும் இரண்டு இடங்கள்

இறைவன் எங்கும் அருவாய் நின்று ஆடுகின்றான். எல்லா இடங்களும் அவன் நடம் புரியும் இடமேயாயினும் அவற்றுள் இரண்டு இடங்களைச் சிறந்தனவாக எடுத்துக் கூறுவர். ஒன்று உயிர்களின் அறிவும், மற்றொன்று தில்லைச் சிற்றம்பலமும் ஆகும்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி

பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி 

என்று திருவாசகம் இவ்விரண்டிடங்களையும் குறிப்பிடும்.

உயிர்களின் அறிவில் நின்று அவன் இடைவிடாது உணர்த்தி வருகின்றான். அச்செயல் அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும். அதனைப் பரநடனம் எனக் குறிப்பிடுவர். புருவ நடுவில் நிகழ்வதாகிய இந்நடனம் இல்லையேல் உயிர்களுக்கு அறிவு விளங்குதல் இல்லை. ஒருநாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத இறைவன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான். உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான்.

2. இறைவன் கொள்ளும் அருள்திருமேனி

இறைவன் கொள்ளுகின்ற உருவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாயையினால் ஆனதன்று. உயிர்களாகிய நாமெல்லாம் மலம் உடையவர் ஆதலின் மலங்களில் ஒன்றாகிய மாயை நமக்கு உடம்பாக வந்து பொருந்துகிறது. இறைவன் மலம் இல்லாதவன் ஆதலின் மாயை அவனுக்கு உருவமாய் அமைதல் இல்லை. தூயதாகிய அவனது அறிவே அவனுக்கு உருவமாய் அமையும். அறிவின் இயல்பாவது

பிறர் நிலைக்கு இரங்குதல்; கருணை கொள்ளுதல், அருளுதல், இறைவனது அறிவு பெருங் கருணையாயும், பேரருளாயும் நிற்கும். அது பற்றியே அவனது அறிவை அருள் என்றும், கருணை என்றும் குறிப்பர் பெரியோர். இறைவன் தனது அறிவினால் கொள்ளுகிற உருவம் எல்லாம் அருள் திருமேனி எனப்படுகிறது. அவனது திருமேனி அருள். ஆதலினால் அத்திருமேனியிற் காணப்படும் ஆடை, அணிகலம், படைக்கலம் முதலியனவும் அருளேயாம்; அவன் காட்சி தந்து நிற்கின்ற இடமும் அருளேயாம். 

இறைவனது உடம்பு அங்கம் எனப்படும். திருவடி, திருக்கரம் முதலிய உறுப்புக்கள் பிரத்தியங்கம் எனப்படும். அங்கத்துடன் கூடியுள்ள சூலம், மழு, பாம்பு, அபய முத்திரை, நெருப்பு முதலியவை சாங்கம் எனப்படும். அங்கத்தின் சார்பிலிருக்கும் ஆடை, அணிகலம், மாலை. அமரும் இருக்கை முதலியவை உபாங்கம் எனப்படும். அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் ஆகிய இந்நான்கும் அருளேயாம். இறைவனது திருமேனி உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகைப்படும். அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க, இறைவன் அத்திருமேனிகளில் நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

3. மந்திரத்தைத் திருமேனியாகக் கொள்ளுதல்

இனி, இறைவனுக்கு மந்திரம் சிறப்புத் திருமேனியாகச் சொல்லப்படுகின்றது. இதுபற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இறைவன் அனைத்து உலகங்களிலும் கலந்து அவையேயாய் நிற்கின்றான். உயிர் உடலெங்கும் கலந்து தான் சிறிதுந் தோன்றாமல் உடலேயாய் நிற்பது போன்றது இது. அவ்வாறு கலந்திருக்கும் உயிருக்கு உடம்பு வடிவமாய் அமைகிறது. அதுபோல எல்லாவற்றிலும் கலந்திருக்கும் இறைவனுக்கு அவையனைத்துமே வடிவமாய் அமைகின்றன.

எனவே எல்லாப் பொருள்களுமே இறைவனுக்குத் திருமேனிகள்தாம் என்று சொல்லலாம். ஆயினும் அவற்றுள்ளும் மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனியாய் நிற்கின்றன. எவ்வாறெனில், சொற்களும் சொற்றொடர்களும் ஆகிய மந்திரங்கள் சுத்த மாயையில் தோன்றியவை. இறைவன் சுத்த மாயையை இடமாகக் கொண்டு நின்றே அசுத்த மாயையின் காரியமாய் உள்ள பொருள்களையெல்லாம் இயக்கி நிற்பான் என்பது நாமறிந்தது. இம்முறையில் அவன் மந்திரங்களைத் தனக்கு நேரே இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகத் தவத்தோர்க்குப் புத்தி, முத்திகளாகிய பயன்களைத் தருவான். இறைவனுக்கு மந்திரங்கள் சிறந்த வாயில் ஆதலாலும், இறைவன் அவற்றைப் பற்றி அவையேயாய் நிற்பன் ஆதலாலும், அம்மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனிகளாய்ச் சொல்லப்படுகின்றன. கல், மண், பொன் முதலிய பொருள்களும் இறைவன் அவற்றில் கலந்துள்ள கலப்பினால் அவனுக்கு வடிவமேயாயினும், மந்திர வடிவம் அவற்றினும் சிறந்தது என்பது உணர்தற்குரியது. மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரமாகும். அதுவே ஞானத்தைத் தருவது. கூத்தப்பெருமான் திருவைந்தெழுத்தைத் தனது திருவுருவமாகக் கொண்டு ஆடல் புரியும் அருட்பெருமையை ஆசிரியர் இப்பகுதியில் விளங்கக் காட்டியுள்ளார்.

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement