Advertisement

சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 6

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books "Unmai Vilakkam - part 6". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 6), இப்பகுதியில், அடுத்த 36 - 40 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...

36. இறைவன் நடனத்தை அம்மை காண்கிறாள் என்பதன் பொருள் என்ன?

ஞாயிறு உலகத்தோடு தொடர்பு கொள்வது தன் ஒளி மூலமாகவேயாம். அதுபோல இறைவன் உலகத்தோடும் உயிர்களோடும் கொண்டுள்ள தொடர்பு அவனது சத்தியாகிய அருள் வழியாகவேயாம். உமையம்மை காணும்படி நின்று சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகிறான் என்பதை வரைமகள் தான் காணும்படி என்று இந்நூலும், இவ்வாறே பிற நூல்களும் கூறிச் செல்லும். அதன் பொருள்தான் என்ன? சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தல் என்று பொருள் கூறுவர். இதனை மேலும் விரித்துக் கூறினால்தான் பொருள் இனிது விளங்கும். நாம் செய்யும் செயல்களுக்கு, நமக்கு வாய்த்துள்ள உடல், கருவி முதலியவை உடனின்று உதவுகின்றன. நாம் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், நம் உடம்பானது இயங்கி அச்செயலை நிறைவேற்றுகிறது. நாம் ஒருவருக்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் நம் கைகள் இயங்கி அச் செயலை முற்றுவிக்கின்றன. உடம்பும் கருவிகளும் இவ்வாறு உதவினாலும் அச் செயல்கள் நம் செயல்களே. கொடுத்தலையும், எடுத்தலையும் செய்தவர் நாம். அதற்குக் கருவிகள் உடனின்று உதவின. அதுபோல, இறைவன் செய்யும் செயல்களுக்கு அவனது சத்தியே தனு, கரணம் முதலிய எல்லாமாய் நின்று செயல்களை முற்றுவிக்கும்.

நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம். அதுபோல, நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான். முதலில் உள்ள நங்கை என்பது நம் கை எனப்பிரிந்து பொருள்தரும். பின்னுள்ள நங்கை என்பது பெண் எனப் பொருள்பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். இதனால், இறைவனே செயலைச் செய்பவனாக, சத்தி அதனை முற்றுவிக்கும் துணையாக உள்ளமை விளங்கும். எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் என்பது அறியத்தகும். ஞானத்தை உணர்த்தி வீடு அளித்தல் இறைவனது செயல். அச் செயலைச் சத்தியே உயிர்களிடத்தில் உடனாய் நின்று செய்கிறது. முன்னர் அது திரோதான சத்தி என்ற பெயரும் நிலையும் கொள்கிறது. மலங்களைச் செயற்படுத்தி அவற்றின் வழியில் நின்று உயிர்களைச் செலுத்துகிறது. பிறப்பு இறப்புக்களையும் இன்பத் துன்பங்களையும் மாறி மாறிக் கொடுக்கிறது.

திரோதான சத்தி எல்லாவுயிர்களிடத்திலும் ஒரே வகையாகச் செயற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் பக்குவ நிலையில் வேறுபாடு உடையது. ஆதலால், அந்தந்த உயிரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் அறியாமையைச் சிறிது சிறிதாக நீக்கி அறிவைப் படிமுறையில் வளர்த்து வருகிறது. குமர குருபர சுவாமிகள் இதற்கு ஓர் அருமையான எடுத்துக் காட்டுத் தருகிறார். கைக்குழந்தை நோய்வாய்ப்படுகிறது. அந்நோய்க்குரிய மருந்தை நேரே கொடுத்தால் மென்மையான அக்குழந்தையின் பசுங்குடல் அம்மருந்தின் வேகத்தைத் தாங்காது. அதனை உணர்ந்த தாய் அம்மருந்தைத் தான் உண்டு பால் வழியாக அம்மருந்தின் பயனைக் குழந்தை பெறும்படி செய்கிறாள்.

பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென

நோயுண் மருந்து தாய்உண் டாங்கு

--சிதம்பர மும்மணிக் கோவை,

திரோதான சத்தியாகிய தாய் இதுபோன்ற செயலைத் தான் செய்கிறாள். அறியாமைதான் உயிர்களிடமுள்ள நோய். மெய்யறிவுதான் அதற்குரிய மருந்து. அம் மெய்யறிவை ஒரே காலத்தில் ஒருங்கே அளித்தால் உயிர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. உயிரின் பக்குவக் குறைபாடே அதற்குக் காரணம். ஆதலால் உலக நுகர்ச்சியாகிய பால் வழியாக மெய்யுணர்வைச் சிறிது சிறிதாகப் புகட்டி, அதன் அறியாமையைப் போக்கி, உண்மையைப் படி முறையில் உணரும்படி செய்கிறாள். எனவே, கூத்தப் பெருமானின் பக்கலில் நின்று ஆடல் காணும் அம்மை சிவகாமவல்லி திருக்கூத்தை முற்றக் கண்டு அதன் பயனாகிய ஞானத்தைப் பல்லுயிர்களுக்கும் அவற்றின் பக்குவ நிலைகளுக்கு ஏற்றவாறு ஊட்டி, அவற்றின் பாசப் பற்றை அறுத்து, உணர்வைவளர்த்து வரும் தாய் ஆவாள் என்பது உளங் கொள்ளுதற்குரியது.

37. ஐந்தெழுத்தின் பொருள் என்ன?

இறைவனின் திருவருளாக நிற்கும் மந்திரம் என்றும் அழியாத நமசிவய என்னும் திருவைந்தெழுத்து மந்திரம். அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும். அதன் பொருள்:

ந - இறைவனது மறைப்பாற்றல் - திரோதன சக்தி

ம - மும்மலங்கள் - ஆணவ மலம்

சி - இறைவன் சிவபெருமான் (பதி)

வ - திருவருள் (சக்தி)

ய - உ.யிர் (ஆன்மா)

தூல பஞ்சாட்சரம்:

நமசிவய என்பது தூல பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் உலக இன்பங்களைப் பெறலாம். இறைவனின் மறைப்புச் சக்தியால் மும்மலங்களும் நீங்கி சிவபெருமானின் திருவருளால் உயிர்கள் உய்வு பெறும்.

சூக்கும பஞ்சாட்சரம்:

சிவயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் முத்திப்பேறு கிட்டும். சிவபெருமான் திருவருளால் ஆன்மா ஆன்மா இறைவனின் மறைப்புச் சக்தியால் மலம் நீங்கப் பெற்று உய்வு பெறும்.

38. சிவஞானம் பெறுதற்கு ஐந்தெழுத்தை எவ்வாறு ஓத வேண்டும்?

உலகப்பற்று அற்று ஞானத்தில் வேட்கை கொண்டு ஞானநெறியிற் செல்லும் பக்குவர்க்கு உரியது முத்தி பஞ்சாக்கரம். நகாரம் மகாரம் ஆகிய பாச எழுத்துக்கள் நீங்க நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும். ஞானாசிரியர் நிருவாண தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற பக்குவ ஆன்மா அம்மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு, அதன் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்தி அப்பொருளை உணர்ந்து உணர்ந்து நிற்கும். அதனால் வினை நீங்கும். வினை நீங்கவே திருவருள் இனிது விளங்கும்.

39. "ஆதி மலம் இரண்டும் ஆதியா ஓதினால்" -- ஆதி மலம் என்றால் என்ன?

ஆதி என்பது மறைப்பாற்றல் (திரோதான) சக்தியைக் குறிக்கும். இது திருவைந்தெழுத்தில் நகரத்தைக் குறிக்கும். மலம் என்பது மும்மலங்களையும் குறிக்கும். திருவைந்தெழுத்தில் இது மகரத்தைக் குறிக்கும். ஆதி மலம் இரண்டும் என்பது திருவைந்தெழுத்தில் நம என்பதைக் குறிக்கும்.

40. விதிப்படி ஓதுதல் என்றால் என்ன?

உயர்ந்த திருவைந்தெழுத்தை நமசிவாய என ஓதினால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் உயிரிடமிருந்து களையப்பட மாட்டாது. இந்த மூன்று மலங்களையும் உயிரிடமிருந்து களைந்து சிவத்தை சேர வேண்டுமானால், சிவத்தை முதலாவதாக வைத்த சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தையே ஓத வேண்டும். இதுவே விதி. பஞ்சாக்கரத்தை இவ்வாறு ஓதினால் இவ்வுலகத்தில் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ்வதோடு, வீடுபேறு பெற்றுப் பேரின்பத்தோடும் வாழலாம்.பாசத்தைக் களைந்து பதியிலே சேர்தலாகிய முக்தி பஞ்சாக்கரத்தை உணர்ந்து ஓதுவதே, விதிப்படி எனப்பட்டது.

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement