Advertisement

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் - ஞானசம்பந்தர் அருளிய பதிகப்பாடல்கள்.

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books about " Saiva Nalvargal". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

பதிகம் உருவான வரலாறு 

திருநெடுங்களம் – திருச்சி அருகில் துவாக்குடியிலிருந்து 6 கி.மீ. இறைவர்: நித்யசுந்தரர், இறைவி: ஒப்பிலாநாயகி. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்றது. 

திருஎறும்பியூர் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு ஆளுடைய பிள்ளையார் திருநெடுங்களத்தை அடைந்து வழிபட்டு "நின்பால் நேசம் செலாவகைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய்" என வேண்டி "மறையுடையாய்" என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.

பாடலின் சொல்லும் பொருளும் 

வார்சடை – நீண்ட சடை. பிஞ்ஞகன் – பிஞ்ஞிலும் உறையும் சிவன். மேயவனே – உறைபவனே. கனைத்தெழுந்த – முழங்கிய, அதிர வைத்து எழுந்த, நிமலா – குற்றமற்ற தூயவன். வவ்வேல் – வல்+வேல் வல் – வலி, சீக்கிரம். வவ்வேல் – சீக்கிரம் எடுக்காதே. அடல் – வலிமையோடு, வீரியம் மிக்க. மலைபுரிந்த மன்னவன் – பார்வதியின் தந்தை பர்வதராஜனாகிய இமயமலை ஆண்ட அரசன்; இமவான். அவிர்சடை – ஒளிவீசும் சடை; மின்னும். பாங்கினல்லார் – நற்குணமுடையார். படிமம் – தவவேடம். தூங்கி – மனம் ஒன்றி. விருத்தன் – முதியவர். கருத்தனாகி – முழுமுதற்கடவுளாகி. அருத்தன் – பொருளானவன். நிருத்தம் – நடனம்; நிருத்தமண்டபம். நிருத்தர் – நடிப்பவர், நடனமாடுபவர். கீதர் – பாடுபவர். மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெண்கனையால் – அரி, எரி, காற்று மூன்றையும் கூட்டிய கொடிய அம்பினால். அருவரை – மலை. வேழம் – யானை. கேழல் – ஆண்பன்றி. துஞ்சல் – தூக்கம், இறப்பு. சேடர் – சேணியர் என்னும் செட்டி இனத்தவர். மறுகு – குறுந்தெரு. பனுவன் – நூல்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்

தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை

மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்

நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்

அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்

நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்

தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்

தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்

நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்

நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலைஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்

ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த

நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம் மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்

நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலை யின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்

சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்

கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்

நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விளக்கம்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன்போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்

தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்

துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே

நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 

விளக்கம்: கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்

சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்

நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன

பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

விளக்கம்: மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement