Advertisement

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம், நூல் தொடர் - பகுதி 3

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Sivagnabotham - part 3". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

இறைவன் இருக்கிறான் என்பதை எப்படி நிரூபிப்பது?

இறைவனைக் காட்டு என்று பிறர் சொல்வதும், இறைவன் இருக்கிறானா என்று நமக்கு நாமே கேட்பது நமக்கு ஓர் நாள் இவ்வுலகில் ஏற்படும் அனுபவம். கூர்ந்து நோக்குவோமாயின், இந்த உலகம் பல விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது புரியும். உதாரணமாக, தினமும் காலையில் சூரியன் எழும். நாம் தூக்கி எறியும் பொருள் கீழே வரும். ஒரு சூட்டிற்கு மேல் தண்ணீர் கொதித்து காணாமல் போகும். 

இப்படி எண்ணற்ற, ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் சூட்டி அறிந்து கொள்கிறோம். அது போல், பிறப்பவர்கள் எல்லோரும் இறக்கிறார்கள். இது விதி. எல்லா உயிரினங்களும் அப்படியே. இறப்பவை எல்லாம் ஓர் நாள் தோன்றியவையே. மேலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. காரணம் இல்லாமல் எதுவுமே இயங்குவதில்லை. இதற்கு எதுவுமே விதி விலக்கில்லை. இந்த விதிகளை அப்படியே எல்லாவற்றுக்கும் நாம் செலுத்திப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.

இந்த புவனங்களில், ஆண்களும், பெண்களும், விலங்குகளும், பஞ்ச பூதங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் அழிவதை நம் கண் முன்னே காண்கிறோம். அவை தோன்றி வாழ்வதையும் பார்க்கிறோம். தோன்றல், நிற்றல், அழிதல் (அல்லது ஒடுங்குதல்) ஆகிய மூன்று காரியங்களில் நிலைப்பெறுகின்றன. பல்வேறு பகுதிகளைக் கொண்டு ஒரு பொருள் உருவாக்கப்படுகிறது. அந்த பொருள் ஒரு நோக்கத்திற்க்காக உருவாக்கப்படுகிறது. அதன் நோக்கம் நிறைவேறிய பின்னர் அது அழிந்து போகிறது.

உதாரணமாக, நம் சட்டையை எடுத்துக் கொள்வோம். பஞ்சு, நூல், பட்டன் போன்ற பொருட்களை வைத்து சேர்த்து சட்டை உருவாக்கப்படுகிறது. சட்டை ஏன் உருவாக்கப்படுகிறது. ஒருவருக்கு மேலாடையாக அணிவதற்க்கு. சில மாதங்கள் ஆண்டுகள் கழித்து அது கிழிந்தவுடன் மீண்டும் நூலாக பூமிக்கே திரும்பி விடுகிறது. இந்த சுழற்சி எல்லா பொருளுக்கும் பொருந்தும். இதே விதி இந்த பூமிக்கும் அண்டத்திற்க்கும் பொருந்தும். இந்த அண்டமும் பல பகுதிகளின் சேர்க்கையாக இருக்கிறது. உயிரினங்கள், பஞ்ச பூதங்கள் என பகுதிகளின் சேர்க்கையாக விளங்குகிறது. இதற்கும் ஒரு தோற்றமும் முடிவும் உண்டு. ஆகையால், இதைத் தோற்றுவிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும். அதை ஒரு காரணத்திற்க்காக தோற்றுவிக்க வேண்டும் என்பது தர்க்கரீதியாக புலப்படும். ஆகவே, கடவுள் என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்பது நிரூபனமாகிறது.

சிவபெருமான் தான் முழுமுதற்கடவுள் என்பது எவ்வாறு நிரூபிக்கப்படும் ?

இறைவன் ஒருவனே என்பது சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கை. உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்களின் கொள்கையும் அதுவே. இறைவன் இருக்கிறான் என்பதைப் பார்த்தோம். இந்த புவனங்களைப் படைத்து காத்து அழித்து அருள் செய்கிறான் என்பதையும் பார்த்தோம். எவன் ஒருவனால் இந்த பேரண்ட புவனங்களை அழிக்க முடியுமோ, அவனாலேயே அதை திரும்ப அமைக்கவும் முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தை யார் வேண்டுமாயினும் தொடங்கலாம். அதை யார் வேண்டுமாயினும் நடத்தலாம். ஆனால், இந்த நிறுவனத்தை எந்த காரணத்திற்க்காகவும் ஒருவன் எப்போது வேண்டுமானாலும் மூடி விடலாம், நிறுத்தலாம் என்கிற நிலையில் அவனே அந்த நிறுவனத்தின் தலையெழுத்தை எழுத வல்லவனாகிறான். அந்த நிறுவனத்தை நிறுத்த வல்லவனால், பல நிறுவனத்தை கட்டி எழுப்பவும் முடியும். 

அது போலவே, எவன் ஒருவனால் இந்த அண்ட புவனங்களையெல்லாம் ஒடுக்கித் தம்முள் கொள்ள முடியுமோ, அவனாலே, அதைத் திரும்பவும் உருவாக்க முடியும். அதன் தலையெழுத்தை நிர்ணயிக்க முடியும். ஆகவே, இந்த பேரண்ட புவனங்களையெல்லாம் சிவபெருமான் ஒருவனாலேயே ஒடுக்க முடியும். பேரூழிக்காலத்தில் (மகா சங்காரகம்) அத்தனை புவனங்களும் அவனிடம் ஒடுங்கி விடும். பிரம்மன், திருமால், இந்திரன் என்று அத்தனை பேரும் சிவபெருமானிடத்தில் ஒடுங்கிப் போவர். சிவபெருமான் ஒருவன் மட்டுமே நிலைத்திருப்பான். அவன் விருப்பத்தினாலேயே அடுத்த படைப்புத் தொழிலை ஏவுவான்.

ஒரு பிரம்மனின் ஆயுள் 100 கோடி ஆண்டுகள். 100 பிரம்மனின் ஆயுள் ஒரு திருமாலின் ஆயுள். 100 திருமாலின் ஆயுள் ஒரு உருத்திரனின் ஆயுள் என்பார் வாரியார் சுவாமிகள். இப்படி இந்த அநாதியான புவனங்களில் நூறு கோடி பிரம்மர்கள் தோன்றி மறைந்து விட்டனர். ஆறு கோடி நாராயணர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்,
ஆறு கோடி நாராயண ரங்ஙனே,
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்,
ஈறி லாதவன் ஈச னொருவனே.

விளக்க உரை:

நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் சிவபெருமான் மட்டுமே.

ஆகவே, ஒப்பற்ற தலைவன், எட்டு குணங்களை உடையவன், பிறப்பு இறப்பு, முதலும் முடிவும் இல்லாத முழுமுதற் பரம்பொருள் சிவபெருமான் மட்டுமே என்பது தெளிவாகும். 

சிவஞானபோதம் சிந்தனைகள் தொடரும், திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement