Advertisement

சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 5

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 5". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 5), இப்பகுதியில், அடுத்த 31 - 35 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...

31. இறைவன் நடம் புரிவதற்கு உண்மையான இடமும் திருமேனியும் எது?

உயிர் ஆகிய ஆதாரத்தில் நின்று இறைவன் திருநடனம் செய்கின்றான். சிவபெருமான் சிவாயநம என்னும் பஞ்சாக்கரத்தால் திருமேனி கொண்டருளி, உயிர்களின் துன்பத்திற்கு காரணமான பிறப்பு அறும்படி, தன் திருவடியை ஊன்றி திருநடனம் புரிகின்றான். சிவபெருமான் திருமேனி ஐந்தெழுத்தில் அமைந்துள்ளது. பெருமான் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனியாய் அமைவது ஐந்தெழுத்து மந்திரம் என்றும் மேலே பார்த்தோம். இவ்வாறு சொல்லப்படினும், உண்மையில் அவனுக்குத் திருமேனியாவது அவனது அருளேயாகும். அவனுக்கு இடமாவதும் அருளேயாகும்.

32. தூல பஞ்சாக்கரம் ஓதுபவர் நடராஜர் திருவுருவை எப்படிக் காண வேண்டும்?

நடராஜர் திருவடி "ந" காரமாய் இருக்கும். திருவயிறு "ம" காரமாய் இருக்கும். உயர்ந்த திருத்தோள் "சி" காரம் ஆகும். தேதாகமங்களை அருளிய திருமுகம் "வ" காரமாகும். திருமுடி "ய" காரமாய் இருக்கும்.

33. சூக்கும பஞ்சாக்கரம் ஓதுபவர் நடராஜர் திருவுருவை எப்படிக் காண வேண்டும்?

உடுக்கு ஏந்திய வலது திருக்கரத்தில் "சி" காரம் அமையும். தூக்கிய திருவடியைக் காட்டும் இடது திருக்கரத்தில் அருளைச் சுட்டும் "வ" காரம் அமையும். "அஞ்சேல்" என அபயக்குறி காட்டும் வலது திருக்கரத்தில் ஒளிபெற்ற "ய" காரம் அமையும். அக்னி ஏந்திய இடது திருக்கரத்தில் "ந" காரம் அமையும். முயலகனை அழுத்திப் பொருந்தியிருக்கும் வலது திருக்காலில் "ம" காரம் அமையும்.

34. ஊன நடனம், ஞான நடனம், மோன நடனம் விளக்குக.

ஊன நடனம்

தூலம், சூக்குமம், அதிசூக்குமம் ஆகிய மூவகை ஐந்தொழில்களும் ஊன நடனம் என ஒன்றாய் வைத்துச் சொல்லப்படும். இத்தொழில்களால் உயிர்க்கு உண்டாவது உலக நுகர்ச்சியும், சிற்றறிவும் ஆகும். இவற்றால் உயிர் உலக வாழ்விற் கட்டுண்டு நிற்கிறது. இது பற்றியே இறைவனது செயல் ஊன நடனம் எனப்பட்டது. ஞான நடனம் என மற்றொன்று இருத்தலால், ஊன நடனமாகிய இதில் உள்ள ஊனம் என்பது ஞானம் இல்லாமையைக் குறித்தது.

ஞான நடனம்

முதல்வன் உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான். அவற்றுள் பிறப்பைத் தருவது ஊன நடனம் ஆயிற்று. வீட்டைத் தருவது ஞான நடனம் ஆகும்.ஊன நடனத்தின் பயனாக உயிர் உண்மையை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணரும்; பின்பு, தான் சித்தப் பொருளாயினும் தானே அறியும் சூக்கும சித்து அன்று, அறிவித்தால் அறியும் தூல சித்து எனத் தனது உண்மையை உணரும். அதனால், தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும்

சூக்கும சித்து தலைவனாகிய சிவன் என அறியும். இவ்வறிவு நூலறிவாய் அபர ஞானமாய் நில்லாது, அதனை அனுபவமாக பர ஞானமாகப் பெறும். இதுவே பக்குவம் முதிர்ந்த நிலையாகும். தன்னையும் தலைவனையும் உணர்ந்த நிலையாகும். தலைவனை உணர்ந்தவர் அவனே தமது வாழ் முதல் எனக் கொள்வர். தம் வழியில் நில்லாது அவன் வழியில் நிற்பர். முதல்வன் அவரை மும்மலம் நீக்கி அருள் நிலையில் வைத்துப் பேரின்பத்தை நுகரச் செய்வன் இவ்வுதவியும் ஐவகைத் தொழில்களாக வைத்துச் கூறப்படும். இது ஞான நடனம் எனப் பெயர் பெறுகிறது

மோன நடனம்

இவ்வுலகில் பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்தி நிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற கூத்து இதுவாகும். மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும் சிறந்த முனிவர்கள் மும் மல வாதனையை முற்றிலும் நீக்கி, தற்போதம் அற்ற நிலையில் விளங்கித் தோன்றும் பேரின்பமாகிய அமுதத்தைத் கண்களாலும் மொண்டு அருந்தும் படியாக இறைவன் வெளியே திருச்சிற்றம்பலத்துள் புலப்பட நின்று ஆடுகிறான். ஆனந்த நடனம் பரமுக்தி நிலையில் முத்தர்க்குச் செய்யும் உபகாரம் ஆகும்.

35. மிகு பஞ்சாக்கரம் என்பது என்ன ?

மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மேலானதாகிய திருவைந்தெழுத்தால் திருமேனி தாங்கி, அவ்வருளே தனக்கு அரங்காகக் கொண்டு உமையம்மை காணுமாறு திருநடனம் புரிகிறான். மிகு பஞ்சாக்கரம் இறைவன் திருமேனியையும் அருளையும் குறிக்கிறது.

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement