மெய்கண்டார் அருளிய சிவஞான போதம், நூல் தொடர் - பகுதி 2
Hi to all viewers,
We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Sivagnabotham - part 2". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..
இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது.
நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன.
நூற்பாக்களின் பொருள் பின் வருவோர்க்கு ஐயம், திரிபுகளுக்கு இடமின்றி விளங்குதற்பொருட்டு ஆசிரியரே ஒவ்வொரு நூற்பாவுக்கும் கருத்துரையும், சுருக்கமான பொழிப்புரையும் செய்துள்ளார். அப்பொழிப்புரை வார்த்திகம் எனப்படும். வார்த்திகப் பொழிப்புரை பின்வருமாறு அமைந்துள்ளது.
ஒவ்வொரு நூற்பாவையும் ஆசிரியர் அதன் பொருள் நிலையை வைத்துப் பல கூறுகளாக வகுத்துக் கொள்கிறார். அவ்வாறு வகுத்துக் கொள்ளும் கூறு அல்லது பகுதி, அதிகரணம் எனப்படும்.
ஒவ்வொரு கூறிலும் மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்னும் மூன்று உறுப்புகள் இடம்பெறும்.
மேற்கோள் என்பது நூற்பாவிலிருந்து பெறப்படும் கருத்தமைவு. ஏது என்பது அம்மேற்கோளை நிறுவுவதற்கு ஆசிரியர் உரைப்பது. எடுத்துக்காட்டு என்பது அவ்வேதுவை வலியுறுத்துதற்கு வருவது. இம்மூன்றனுள் மேற்கோளும் ஏதுவும் உரைநடையாய் அமைந்தவை, எடுத்துக்காட்டு செய்யுளாய் அமைந்துள்ளது .
சிவஞானபோதம் - சைவ சிந்தாந்த பொருள்நிலை.
சைவ சமயத்தின் தத்துவக் கொள்கை, சைவ சித்தாந்தம் என வழங்கும். சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருள். எனவே சைவ சமயம் இறை பற்றியும், உயிர் பற்றியும், உயிரைப் பிணித்துள்ள தளை பற்றியும் கண்டறிந்த, முற்ற முடிந்த மெய்ம்மைகளே சைவ சித்தாந்தம் ஆகும். இந்நூலைக் கற்கப் புகுமுன், சைவ சித்தாந்த அடிப்படையைத் தெரிந்து கொள்ளுதல் நல்லது. அவ்வடிப்படைப் பொருள் நிலையைப் பின்வருமாறு கூறலாம்.
உயிர்கள்
அறியும் தன்மை உடையது உயிர். உயிர்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவை ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல; இறைவன் என்று உண்டோ அன்றே அவையும் உள்ளன. தோற்றம் இல்லையாதலால் அவற்றிற்கு அழிவும் இல்லை. எனவே உயிர்கள் என்றும் உள்ளவையாகும்.
ஆணவம்
அத்தகைய உயிர்களிடம் அவற்றை மறைத்து நிற்பதாகிய ஓர் அழுக்கு இயற்கையாகவே உள்ளது. அரிசியை உமி மூடி மறைத்திருப்பதைப் போன்றது இது. அரிசி உள்ள அன்றே உமியாகிய குற்றமும் அதனுடன் பொருந்தியிருப்பதைப் போல உயிர்கள் உள்ள அன்றே அவ்வழுக்கும் உடனாய் உள்ளது. அதனை ஆணவ மலம் என்ற பெயரால் குறிப்பர். மலம்- அழுக்கு.
உயிர்கள் முதற்கண் ஆணவ மலத்தோடு கூடியே இருந்தன. அது கேவல நிலை எனப்படும். அந்நிலையில் உயிர்கள் அறிவும் செயலும் இன்றித் தாயின் கருப்பையில் கிடக்கும் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல முழு அறியாமையில் மூழ்கிக் கிடந்தன.
மாயை
இவ்வாறு ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதனால் அறியாமை எய்தித் துன்புறும் உயிர்களின் நிலை கண்டு இரங்கிய இறைவன் அம்மலத்தை நீக்குவதற்குத் திருவுளம் கொள்கிறான். அதன் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்விற் செலுத்துகிறான்; அவை தங்குவதற்கு உடம்பையும், அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தையும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.
குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வதுபோல, உடம்பு முதலிய இக்காரியங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். அம்மாயை என்னும் பொருளும் என்றும் உள்ளதேயாம்.
ஆணவ மலத்தோடு கூடியிருந்த உயிர்கள் இப்பொழுது மாயையோடும் கூடி நிற்கின்றன. இதுதான் பிறப்புநிலை, சகல நிலை என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர்கள் உடம்பாலும், உடம்பில் அமைந்த கருவிகளாலும், வாழ்க்கைச் சூழலாலும் ஓரளவு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருவதைக் காணலாம். எனவே இவ்வுலகம் அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம் போல்வது எனலாம்.
கன்மம்
அறிவும் செயலும் இன்றிக் கிடந்த கேவல நிலையினின்றும் இறையருளால் சகலநிலைக்கு வந்த உயிர்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையனவாய், தம் மனம் மொழி மெய்களினால் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றன. அவையே கன்மம் எனப் பெயர் பெறுகின்றன.
இறைவன் அவ்வவ்வுயிர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்ப அவற்றிற்குப் பிறப்புக்களையும் இன்ப துன்பங்களையும் அளிக்கின்றான்.
உயிர்கள் தாம் பெற்ற மாயையின் காரியமாகிய கருவிகளால் மாயையின் காரியங்களாகிய உலகப்பொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் அவற்றை மேலும் மேலும் பெற வேண்டும் என முயன்றும் வினைகளைச் செய்து உலக வாழ்வில் கட்டுண்டு நிற்கின்றன.
உயிர்களை உலகத்தோடு பிணித்து நிற்பவை மாயையும் கன்மமும், அவை வருவதற்கு மூலமாகிய ஆணவமும் ஆகும் அது பற்றியே அம்மூன்றும் கட்டு, தளை, பாசம் என்னும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. இச் சொற்கள் யாவும் ஒரு பொருள் உடையன.
ஒரு கட்டினை நீக்க இரு கட்டுகளை இடுதல்
முதற்கண் உயிர்கள் ஆணவம் என்னும் ஒரு கட்டுடன் இருந்தன. அக்கட்டிகனை நீக்குவதற்காக மாயை, கன்மம் என்னும் இரு கட்டுகளைச் சேர்க்கின்றான் இறைவன்.
அவிழ்த்தற்கு அரிய ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு நடைமுறையில் நாம் கையாளும் வழி, அதனைக் காட்டிலும் இறுக்கமாக மற்றொரு கட்டினைப் போடுவது தான். அதனால் முதற்கட்டுத் தானே நெகிழ்ந்துவிடும் அல்லவா? அதுபோல இறைவன் ஆணவக் கட்டினை நெகிழ்விப்பதற்காகவே மாயை, கன்மங்களாகிய இரு கட்டுகளை இடுகின்றான் என அறியலாம்.
சிவஞான போதம் சிந்தனைகள் தொடரும். திருச்சிற்றம்பலம்...
