Advertisement

சைவ தத்துவங்களின் உண்மை விளக்கம், கேள்வியும் பதிலும் - பகுதி 3

Hi to all viewers, 

We tried our level best to get correct interpretation of this most valuable saivam Books " Unmai Vilakkam - part 3". If there is any mistake (or) wrong explanation, please write to us using comments section to correct it. Thanks and forgive us, if there is any hiccups happened knowingly or unknowingly..

உண்மை விளக்கம் (பகுதி - 3)  இப்பகுதியில், அடுத்த 21 - 28 கேள்வி பதில்கள்; உங்கள் பார்வைக்கு...

21. புருடன் என்பது எதைக் குறிக்கிறது? அது ஒரு தத்துவமா இல்லையா?

பஞ்சகஞ்சுகம் எனப்படும் ஐந்து சட்டைகளையும் ஆன்மா அணிந்து நிற்கும் நிலையில் புருடன் எனப்படும். இந்நிலையே புருடதத்தவம் எனப்படுகிறது. தத்துவம் என்று கூறப்பட்டாலும் இது ஏனைய தத்துவங்களைப் போல தனித் தத்துவம் அன்று. ஆகவே புருடன் என்பது தனித்தத்துவம் அன்று. அது ஆன்மாவின் நிலை.

22. ஆன்மா எப்பொழுது பொது வகையில் வினைப் போகத்துக்குத் தகுதி பெறுகிறது? அது எப்பொழுது சிறப்பு வகையான தகுதி பெறுகிறது?

பஞ்சகஞ்சுகமாகிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகியவற்றை ஆன்மா அணிந்து நிற்கும் போது புருடன் எனப்படும். இந்த நிலையிலேயே ஆன்மா பொதுவகையில் வினைப் போகத்தை நுகரும் தகுதி பெறுகிறது. பின்னர், பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போது சிறப்பு வகையான தகுதி பெறுகிறது. பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது. அதனால், ஆன்மா பிரகிருதியோடு பொருந்தும் போது புருடனாம் நிலையை சிறப்பாகப் பெறுகிறது. இதனால், காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்றும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.

23. வித்யா தத்துவங்கள் எத்தனை? அவை யாவை? அவற்றின் தொழில் என்ன?

வித்யா தத்துவங்கள் ஏழு. தத்துவங்களும் அவற்றின் தொழில்களும்:

தத்துவம் - தொழில்

1. காலம்
  • இறந்த காலம் - எல்லை
  • நிகழ் காலம் - பலம்
  • எதிர் காலம் - புதுமை

2. நியதி - எப்போதும் நிச்சயித்தல்.

3. கலை - கிரியை விளங்கச் செய்தல்

4. வித்தை - அறிவு விளங்கச் செய்தல்

5. அராகம் - ஆசை விளங்கச் செய்தல்

6. புருடன் - ஐம்புலனும் ஆரவரும் காலம்

7. மாயை - மயக்குதல்.

உயிருக்கு வினைப் பயன்களை இத்துணைப் பொழுது என வரையறுப்பது காலம் அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாகி நிற்கும். அவற்றுள் இறந்தகாலம் வினைகளை நுகர்ச்சியினால் கழியச்செய்து உயிரை அவ்வினையினின்றும் பிரிக்கும். இதுவே எல்லை எனப்பட்டது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகர்விக்கும் இதுவே பலம் எனப்பட்டது. எதிர்காலம் வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்யும். இதுவே புதுமை எனப்பட்டது.

24. சுத்த தத்துவங்கள் யாவை?

சுத்த தத்துவங்கள் - 5. அவைகள்,.

சிவதத்துவம்

முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

சத்திதத்துவம்

இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில், அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

சதாசிவ தத்துவம்

இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.

ஈசுர தத்துவம்

ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.

சுத்த வித்தியா தத்துவம்

கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாகவும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.

25. வாக்குகள் எத்தனை வகைப்படும்?

வாக்குகள் ஐந்து வகைப்படும்

  1. சூக்கும வாக்கு - சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது
  2. பைசந்தி வாக்கு - சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது
  3. மத்திம வாக்கு - உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை
  4. சூக்கும வைகரி வாக்கு - சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை
  5. தூல வைகரி வாக்கு - தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும் படியாகப் பல், நாக்கு,கண்டம்,வயிறு என்ற உறுப்புகளின் மூலம் தோன்றுவது.

26. ஆணவம் என்பதற்கு மனவாசகங்கடந்தார் தரும் விளக்கம் என்ன?

காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காணவொட்டாதபடி இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அகவிருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளேயாகும். அறியாமையைத் தருவது ஆணவமலம்.

27. "மாறா வினை" என்பது என்ன? கன்மத்தை இவ்வாசிரியர் எவ்வாறு விளக்குகிறார்?

மாறா வினை என்பது ஆன்மாவை விட்டு நீங்காமல் தொடர்ந்து வரும் கன்மம், மாயை ஆகிய மலங்களாகும்.

ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும். ஆணவத்தினால் வினை எப்படித் தோன்றுகிறது என்பதைக் காண்போம். உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளேயாகும். ஆயினும் சுதந்திரமான அறிவுடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு ஏது? பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தானே அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் அல்லவா துணை செய்கின்றன?. இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது ஏது? உயிருக்குச் சுதந்திர அறிவு இல்லாமை போலவே சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும். இத்தகைய செயல் உரிமை உயிருக்கு இருக்கிறதா?

இறைவனையின்றி ஆன்மா எதனையும் தானே அறியவும்மாட்டாது; எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும் ஆணவ மலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

28. "வேறு ஆகா என்னை" என்பதன் பொருள் என்ன?

முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும், ஆணவம், வினை என்ற இரு மலங்களின் தன்மைகளையும் ஆசிரியர் உரைக்க கேட்ட மனவாசகங்கடந்தார் ஆசிரியரின் அருளால் அவற்றை உணர்ந்து கொண்டார். இதுகாறும் இத்தத்துவங்களோடு கூடி இவையே நான் என்று மயங்கியிருந்தேன். ஆணவம், வினை இவற்றின் விளைவுகளாகிய அறியாமையையும் இன்ப துன்பங்களையும் என் இயல்புகள் என்று தவறாகக் கருதியிருந்தேன். இம் மயக்கவுணர்வு நீங்கி நான் யார்? என்பதை உணரும்படி என் உண்மையான இயல்பை எனக்கு உணர்த்தியருள்க. இவ்வாறு மாணாக்கர் வேண்டுகிறார்.

திருச்சிற்றம்பலம்...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement
Advertisement
Advertisement
Advertisement